Monday 23 December 2013

நாழிக்கிணறு..!




திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.

இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்...!




Tuesday 10 December 2013

ராஜ ராஜ சோழன், வரலாற்றுப் பதிவு


குறிப்பு-விக்கிப்பீடியாவிலிருந்து,மற்றும் பல தளங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பதிவு தான் இது.என் முன்னோர் நான் பதிவிடுவதர்க்காக தொகுத்து வைத்த ஓலைச்சுவடிகளிளிருந்து தொகுக்கப்பட்டதல்ல.வரலாற்று சம்பவங்களும் கதைகளும் படிக்கும் பொது ஒரு வித ஆவல் கிளர்ச்சி எழும்.அப்படிப்பட்ட ஆளாயின் தொடருங்கள்..சில விசயங்களை பகிர்வதால் நமக்கும் ஒருவித திருப்தி...அதில் இதுவும் ஒன்று.குறைந்தது ஒரு ஐந்து பேராவது வாசித்தால் சந்தோசம்!சில விளக்கம் தேவையான முக்கிய சொற்கள் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளன..மேலதிக விளக்கம் தேவைப்படின் அதனை கிளிக்கி சென்று பாருங்கள்!



இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகாலஉத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன்முதலாம் இராசேந்திரன்காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

ஈழப் போர்


ஈழம்

இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்தசிறந்த கோயிலுக்குஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.
இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின்தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னடவீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இராஜராஜ சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது.[3]


ஈழப் படையெடுப்பின் விளைவுகள்

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம்இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்கபொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர்ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்றதமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.
பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.


ஈழத்தில் சோழக் கோயில்கள்

இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.

இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. 
இவன் வலிமை மிக்க
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது

தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்

இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.1014 C.E.
ஆட்சிக்காலம் கி.பி. 985 - கி.பி. 1012
title இராசகேசரி
தலைநகரம் தஞ்சாவூர்

அரசி உலக மாதேவியார்
வானவன் மாதேவியார்
சோழ மகாதேவியார்
பிள்ளைகள் இராசேந்திர சோழன்
மாதேவடிகள்
குந்தவை
முன்னவன் உத்தம சோழன்
பின்னவன் இராசேந்திர சோழன்
தந்தை சுந்தர சோழன்
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1014


ராஜ ராஜ சோழன் பெருமைகளை உரைக்கும் காணொளி ஒன்று..பலர் பாத்திருக்க கிடைத்திருக்காது.பாருங்கள் ஒருவித உணர்ச்சி உங்கள் மனதில் தோன்றும்!




தஞ்சை கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது

.




தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது

கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )

சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.



Monday 9 December 2013

அருவிகளில் முதன்மையானதாகத் திகழும் குற்றாலம்!


மந்தி சிந்தும் கனிகளுக்கு,வான்கவிகள் கொஞ்சும்.   மந்திகள் தின்று கீழே போடும் கனிகள் நமக்கு கிடைக்காதா? என்று கவிகள் ஏங்குவார்கள் என குற்றாலத்தின் சிறப்புகளை ஒரே வரியில் சொல்லிவிட்டார் திரிகூடராசப்பக்கவிராயர். அப்படிப்பட்ட குற்றாலத்தில் மெயின் அருவி,ஐந்து பக்கங்ளிலும் கொட்டும் ஜந்தருவி,புலி அருவி,சிற்றருவி,பழையகுற்றால அருவி,செண்பகாதேவி அருவி,தேனருவி என ஏழுவகையான அருவிகள் ஒரே குற்றாலம் மலையிலிருந்து கொட்டும் அருவிகளின் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாதபடி இயற்கை அன்னை பெருங்கொடையாக நெல்லை மாவட்டத்தின் தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் பக்கம் கொடுத்திருக்கிறார்.
                  சிறப்பு சேர்ப்பு இதோடு நின்று விடவில்லை. பல அரிய பெரிய வைத்திய குணங்களை இந்த மலையருவிகளும் மலையில் படர்ந்திருக்கும் மூலிகைகளும் கொண்டிருப்பதை உறுதிசெய்கிறார். 1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர்.
 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார் டாக்டர் ஒயிட்.  அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான  மலை என்கிறார் அந்த பிரிட்டிஷ்காரர்.
கேரளாவின் வான்மழையான தென்மேற்கு பருவக்காற்று துவங்கும் மே மாதம் முதல் ஆகஸ்ட்டின் மத்திய நாட்கள் வரையிலும் அதன் எதிராலியாய் அண்டைப்பகுதியான குற்றாலத்தில் மலையில் சாரல் பொழிந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கிவிடும்.
                  சுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் சாரல் மழை சீசனில் மலையில் உள்ள மூலிகைச் செடிகள் உயிர்பெற்று துளிர்த்துவிடும். அந்த மூலிகைச் செடிகளின் வழியே வழிந்தோடி அருவியாய் கொட்டும் தண்ணீரில் குளித்தால் சரும நோய்கள் தீருவதோடு தலைவலியும் குணமாகும் தன்மைகொண்டது.
 File:குற்றாலம், திருநெல்வேலி.jpg
                    ஒருசமயம் இங்கே கோவிலாய் குடிகொண்டிருக்கும் சிவபெருமானான குற்றால நாதருக்கு கடுமையான தலைவலி கண்டதாம். அப்போது அவரை தரிசிக்க வந்த அகத்திய முனிவர் மூலிகை குணங்களைக் கொண்ட குற்றால அருவி நீரை அபிஷேகம் செய்ய தலைவலி தீர்ந்ததாம்.
                  குற்றாலக் கவிராயரின் இலக்கியம் அதனை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அருவிகளில் குளிப்பதால் மூலிகைகளின் குணங்கள் மூளை பாதிப்பால் மன நலம் குன்றியவர்களையும் குணமாக்குகிறது.   அதன் காரணமாகவே இங்கு மனநல வைத்தியசாலைகளில் பலர் தங்கி அருவிக்குளியல் நடத்துவது தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது.
                  மேலும் அருவிகளில் குளிக்கவருபவர்கள் இங்கு விரும்பி ஆயில் மாஜாஜ் செய்து கொள்ளுகின்றனர். இதற்கென பல ஆயில் மஜாஜ் கூடங்களில் திறமையான மஜாஜ் பணியாளர்கள் பணியாற்றிவருகிள்றார்கள். இந்த மஜாஜ் மூலம் உடம்பின் உஷ்ணம் தணிவதோடு ஆயுர்வேத தைலங்கள் மயிர்க்கணுக்களில் உடம்பின் உள்ளே செல்வதால் உடல் புத்துணர்ச்சியும் அடைகிறது. 
 பல் முளைக்காத பாப்பா முதல் பல் உதிர்ந்து போன பாட்டைய்யா வரையிலானவர்கள் ஆபத்தின்றி அருவிக்குளியல் நடத்தும் பாதுகாப்பான அருவிகளின் நகரம் குற்றாலம் மட்டுமே.
                ஆண்கள் பெண்கள் தனித்தனியாக அருவிக்குளியல் போடுவதற்கு வசதியான ஏற்பாடுனகளை டவுண்ஷிப் நிர்வாகம் செய்திருப்பதால் இரவு பகல் 24 மணிநேரமும் சுற்றுலாப்பணிகள் அச்ச மின்றி குளியல் போடுகிறார்கள்.  அதன் காரணமாகத்தான் குற்றாலம் ஏழைகளின் ஊட்டி என பெருமையாகப் பேசப்படுகிறது.
 
               தனியாகவும்,குடும்பத்தோடு தங்குவதற்கு வசதியான காட்டேஜ்கள்,ரிசார்ட்கள் பெருகியதோடு மாலையில் பொழுது போக்கிற்காக கலையரங்கில் கலைநிகழ்ச்சிகளும் களைகட்டுகின்றன. உழைப்பு உழைப்பு, சிந்தனை டென்ஷன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு குற்றாலம் அருமையான ரிலாக்ஸ் ஸ்பாட் என்பது அனுபவசாலிகளின் மறுக்கமுடியாத கருத்து.
வழித்தடம் :
                 திருநெல்வேலியிருந்து தென்காசி வழியாக 50கிலோ மீட்டர் தொலைவு கடந்து தென்காசியை ஒட்டி 5கிலோ மீட்டர் பக்கமுள்ள குற்றாலத்தை சிறப்புவாகனங்கள் மூலம் ஒருமணி நேரத்திலும், பேருந்துகளின் மூலமாக ஒன்றரை மணி நேரத்தில் அடைந்து விடலாம்.
மதுரையிருந்து வருவதென்றால் கல்லுப்பட்டி ராஜபாளையம் கடையநல்லூர் வழியாக தென்காசி மார்க்கமாக குற்றாலம் சென்று விடலாம்.                                                                         

வீர பாண்டிய கட்டபொம்மன் வீர வரலாறு



""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.
 இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.''

""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''.


— கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.

அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப் இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.

ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.

1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதரலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதரலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.

இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.

தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.

இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.

இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன் ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.

பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.

கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.

1799ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும் இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.

நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.


உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
 

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.

முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.

தப்பிச் சென்றவர்களை கோலார் பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.

இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.

கயத்தாறு தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு ""ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்'' என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
 
கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.
 

தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். ""படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை'' என்று அறிவித்தான் பானர்மேன்.

இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.


இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.





Monday 2 December 2013

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்


    தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தார்கள். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுத்து வழிபட்டான். அவனது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றினர். இங்குதான் மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் ஓர் கற்கோயில் எடுத்துப்பித்து அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பெருமை பெற்றான்.

‘இராஜராஜேச்சரம்’ – பெயர்க்காரணம்.
“கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.”
“பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.”
சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.
templeview12
இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.
“இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.
“மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.”
‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.
நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில்
keralanthakangate1இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE)
இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.
ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.
திருக்கோயிலின் அமைப்பு
ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
thanjai-kovil-1
கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.
இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.
அற்புதமான துவாரபாலகர்கள்
dwarapalaka
பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.
அம்மன் ஆலயம்
நத்தி மண்டபத்திற்கு வடபுறம் அமைந்திருப்பது அம்மன் ஆலயம். இங்கு மேற்புறச் சுவரில் காணப்படும் ஓர் கல்வெட்டின்படி இது பாண்டிய மன்னனின் கல்வெட்டு என்பது தெரிகிறது. முதலில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில்தான் படிகள் இருந்தனவாம். பிறகு நாயக்க மன்னர்கள் காலத்தில் முன்மண்டபம் வழியாகச் செல்லும் பாதை அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரமிச்சி நாயக்கர் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் ஆகியவற்றை எழுப்பித்ததோடு ஆலயத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியருக்கு ஓர் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயிலையும் எழுப்பியிருக்கின்றனர். நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் வைணவர்களாக இருந்தபோதும் தஞ்சையில் நாயக்க வம்சத்தை ஸ்தாபித்த சேவப்ப நாயக்கன் மட்டும் சைவனாக இருந்தான் எனவும், இவனே சுப்பிரமணியர் ஆலயத்தை எழுப்பியிருக்க வேண்டும் என்றும் நம்புகின்றனர்.
நந்தி மண்டபமும் அங்கே அமைந்திருக்கும் மாபெரும் நந்தியும் நாயக்க மன்னர்களின் கொடை. இந்த ரிஷப மண்டபம் 5அடி உயரமுடைய மேடைமீது 16 தூண்கள் கொண்டு எழுப்பப்பட்டிருக்கிறது. மேற்கூரை ஒரே சமதளமாக இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் அமைந்துள்ளது. இந்த நந்தி மண்டபத்தையும், சந்நிதிக்குள் நுழையும் முன்மண்டபத்தையும் இணைக்க நாயக்க மன்னர்கள் முயன்றிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எழுப்பிய ஒரு தூண் இப்போதும் துவஜஸ்தம்பம் அருகில் இருக்கிறது.
thanjai-kovil-lingamவிநாயகர் ஆலயம்
திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயம் மராட்டிய மன்னன் சரபோஜியால் கட்டப்பட்டது. மன்னன் ராஜராஜன் கட்டிய விநாயகர் கோயில் திருச்சுற்று மாளிகையில் இருக்கிறது. இது மராட்டிய கட்டுமானத்தோடு விளங்குகிறது. இதன் பின்புறம் 108 சிறிய சிவலிங்கங்கள் உள்ளன. இவற்றை சரபோஜி மன்னன் வீரசிங்கம்பேட்டை எனும் ஊரிலிருந்து கொண்டுவந்து 1801இல் பிரதிஷ்டை செய்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இச்சிவலிங்கங்கள் வீரசிங்கம்பேட்டையில் கி.பி. 750இல் இரண்டாம் நந்திவர்மன் எழுப்பிய ஆயிரத்தளியில் இருந்தவை, பின்னாளில் அந்நகரம் அழியவே அந்த இடிபாடுகளிலிருந்து லிங்கங்களைக் கொணர்ந்து சரபோஜி இங்கே பிரதிஷ்டை செய்தான் என்கின்றனர்.
தஞ்சை பெருவுடையார் திருவுருவம்
தஞ்சைக் கோயிலின் கட்டட அமைப்பு பெரும் கோயிலாகத் தொன்றுகிறதோ அதுபோலவே அதிலுள்ள சிற்பங்களுமும் பெரியதாகவும் எழில்மிகுந்தனவாகவும் காட்சியளிக்கின்றன. மற்ற சிவாலயங்களைப் பார்க்கும்போது இங்குள்ள சிற்பங்கள் தனித்துவமிக்கதாக இருக்கின்றன. இங்குதான் மிகப்பெரிய சிவலிங்கம் மூலவராகக் காட்சியளிக்கிறார். பெருவுடையார் எனப்பெயர் பெற்று விளங்கும் இந்த லிங்கத் திருமேனி முழுவதும் கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது. மூன்று பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இதில் நடுவில் லிங்கபாணம் நீண்ட தூண்வடிவில் இருக்கிறது. அதன் மேல்பாகம் உருளை வடிவில் இருக்கிறது. இதன் பீடப்பகுதி சதுர வடிவில் இருக்கிறது. நடுப்பகுதியில் எண்பட்டை அமைப்பில் இருக்கிறது. இது தரையிலிருந்து 12 அடி 10 அங்குல உயரத்தில் இருந்தாலும் இதன் அடிப்பகுதி தரைக்குள் 3 அல்லது 4 அடியாவது புதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ இது 16அடி உயரமுடைய ஒரே கல்லிலால் ஆன லிங்க வடிவமாகும்.
இராஜராஜேச்சரத்தில் மனித உருவச் சிலைகள்
இராஜராஜேச்சரத்து கல்வெட்டில் மன்னனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன் தந்தை இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழருக்கும் தன் தாயார் வானமன் மாதேவியார்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்தமை பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த சுந்தர சோழனை பொன்மாளிகை துஞ்சின தேவர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவர் நந்திபுரத்து அரண்மனையில் பொன்மாளிகையில் துஞ்சினவர் என்பதால் இந்தப் பெயர் பெற்றார். இராஜராஜன் அவன் தமக்கையார் ஆகியோர் தங்கள் தந்தைக்கும் தாய்க்கும் படிமங்கள் அமைத்து வழிபட்டமை தெரிகிறது.
இவை தவிர மன்னன் இராஜராஜனுக்கும் அவனது தேவி லோகமாதேவி ஆகியோர்க்கு பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியன் எனும் தென்னவன் மூவேந்த வேளான் படிமங்கள் எடுத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
அர்த்த மண்டப தென்வாயிலில் மன்னன் இராஜராஜனும் அவன் மகன் ராஜேந்திரனும் சிலைவடிவில் காட்சியளிக்கிறார்கள். அவை அளவில் மிகச் சிறியதாகவும் கடவுளை வணங்கும் கோலத்தில் அவை வடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
இராஜராஜேச்சரத்தில் கலைப்பணிகள்
anotherviewtower1தஞ்சை இராஜராஜேச்சரத்தில் இயல் இசை நாடகம் எனும் தமிழனின் முத்தமிழ் பிரிவுகள் சிறப்பாக வளர்ந்திருக்கின்றன. இவை இங்குள்ள கல்வெட்டுகள், சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறியலாம். பின்னர் வந்த விஜயநகரப் பேரரசுகள், மராத்தியர்கள் ஆகியோர் காலத்திலும் இவை இங்கு சிறப்பாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.
இராஜராஜன் தேவார ஏடுகளைச் சிதம்பரம் ஆலயத்திலிருந்து மீட்டான் எனவும், அதனை நம்பியாண்டார் நம்பி முறைப்படுத்திக் கொடுத்தார் எனவும் வரலாறு சொல்லுகிறது. எனினும் இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இதற்காக பணியாற்றியோர் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இங்கு திருமுறை விண்ணப்பம் பாடுவோர், உடுக்கை வாசிப்போர், மத்தளம் வாசிப்போர் ஆகியோர் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியக் கலை மிக மேன்மையாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தி. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளும் ஏழு நட்டுவனார்களும், உடன்பாடுவோர் நான்கு பேரும், மெராவியம் எனும் இசைக்கருவி இசைப்பார் இருவர், கானம் பாடுவோர் இருவர், வங்கியம் இசைப்பார் மூவர், பாடவியம் எனும் இசைக்கருவியை இசைப்போர் நால்வர், உடுக்கை வாசிப்போர் இருவர், வீணை வாசிப்போர் இருவர் ஆரியம் பாடுவார் மூவர் (அதாவது வேதம் ஓதுதல்) தமிழ் பாடுவோர் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுவோர் மூவர், பக்கவாத்தியம் வாசிபோர் ஐவர் இப்படி பற்பலர் இங்கு பணிபுரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. திருப்பதியம் விண்ணப்பம் செய்வோருக்கு பிடாரர்கள் என்று பெயர்.
thanjai-kovil-paintingஇப்படி ஆலயத்தில் பாடுவதற்கும், உடன் வாத்தியம் வாசிப்பதற்கும், நடனமிடுதற்கும் இந்தக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் இவைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டியமாடும் நங்கையர் நானூற்றி ஏழு பேருக்கும் இரண்டு தளிச்சேரிகள் (குடியிருப்புப் பகுதிகள்) அமைத்து அவரவர்க்குத் தனித்தனியாக வீடுகள் கொடுத்து அவற்றுக்கு இலக்கங்களும் கொடுத்த செய்தி குறித்து வைக்கப் பட்டிருக்கிறது. இந்த நங்கையர் அனைவர் பெயர்களும் அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர், முன்பு பணிபுரிந்த இடம் ஆகிய செய்திகளும் கொடுக்கப் பட்டிருப்பதிலிருந்து, அரசன் இவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தான் என்பதை அறியலாம்.
ஆடற்கலைக்கு அரசன் அளித்த முக்கியத்துவம், அவன் வடித்துள்ள கரணச் சிற்பங்களிலிருந்து அறியலாம். ஆடற்கலைக்கு மூல முதல்வன் சிவபெருமான் நடராஜ மூர்த்தி எனும் ஆடவல்லான் ஆகும். “ஒரு மொழிக்கு எழுத்தும், அவ்வெழுத்துக்களின் கோர்வையான சொற்களும்தான் அடிப்படை. அதுபோல பரதக் கலைக்கு அடிப்படையாகத் திகழ்வது நூற்று எட்டு கரணங்கள். சிவபெருமான் முதன்முதலில் கரணங்களைப் போதித்தாராம். தஞ்சை இராஜராஜேச்சரத்தைப் போலவே பரதக்கலை கரணங்கள் தில்லை, திருக்குடந்தை, திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் உள்ளன. சில இடங்களில் பெண்கள் கரணங்கள் ஆடுவதாகவும், குடந்தையில் முருகக் கடவுள் ஆடுவதாகவும் சிற்பங்கள் உண்டு. இங்கு தஞ்சையில் பெருவுடையார் மூலத்தானத்துக்கு மேலே உள்ள பிரகார சுவர்களில் இந்த 108 கரணங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. 104 முழுமை அடைந்து விட்ட நிலையில் என்ன காரணத்தாலோ கடைசி நான்கு நிறைவு பெறவில்லை.
ஆலய ஊழியர்களுக்கு நிவந்தங்களும் ஊதியங்களும்
மாமன்னன் இராஜராஜன் இவ்வாலயத்தின் செயல்பாட்டுக்காக பல நிவந்தங்களை இட்டு வைத்தான். எண்ணற்ற பொன்னணிகள், பொன்னால் ஆன பாத்திரங்கள், பொன் திருமேனிகள், வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளித் திருமேனிகள், செப்புத் திருமேனிகள் என்று இவன் வழங்கியுள்ள நிவந்தங்கள் எண்ணற்றவை. சோழமண்டலத்தில் மட்டுமல்ல இவன் வெற்றி கொண்ட பிற பிரதேசங்களிலிருந்தும் பல ஊர்களை இந்தக் கோயிலுக்கு அளித்திருக்கிறான். ஊர்நத்தம் திருக்கோயில்கள், குளங்கள் என்று இவன் செய்வித்த அறங்கள் அளப்பரியன. நிலங்களுக்கு வரி நிர்ணயம் செய்து ஒவ்வோராண்டும் அளக்கப்பட வேண்டிய நெல்லும், அந்த நெல்லை அளக்க ‘ஆடவல்லான்’ எனும் பெயரில் ஓர் மரக்காலும் நியமித்தான்.
thanjai-kovil-front-elephant
ஒரு ஊரின் மொத்த நிலப்பரப்பு, அதில் வரி விலக்கு பெற்ற விளை நிலங்கள், கோயில்களுக்கு தேவதானமாகத் தரப்பட்ட நிலப்பரப்பு, அதற்கு நிச்சயிக்கப்பட்ட வரி கோயிலுக்கு செலுத்துதல், எவ்வளவு நெல் அளக்க வேண்டும் என்பதுபோன்ற பல விவரங்களை கல்வெட்டில் எழுதி வைத்தான். துல்லியமான நில அளவினைக் குறித்து கோயிலுக்கு வரவேண்டிய நெல்லின் அளவு போன்றவற்றையும் மிகச் சரியாகக் குறித்து வைத்தான். இவன் பல ஊர்களிலும், பல நிலப்பரப்புகளிலிருந்தும் கோயிலுக்கு வரவேண்டிய மொத்த நெல்லின் அளவையும் குறித்து வைத்திருக்கிறான். அதன்படி இக்கோயிலுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்துப் பதினையாயிரம் கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2000 காசுகளும் நிரந்தர வருமானம் கிடைக்க ஆவன செய்தான்.
பெருவுடையார் ஆலயத்துக்கு பணிக்கப்பட்ட தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தலைக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலம் மான்யமாக அளிக்கப்பட்டிருக்கிறது. வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல்லை இவர்கள் பெற்றார்கள். இந்தப் பெண்கள் இறந்தாலோ அல்லது வெளியூர்களுக்குச் சென்றுவிட்டாலோ உரிமையுள்ள இவர்களது குடும்பத்தார் நிலத்தின் பலன்களைப் பெறமுடியும்.
thanjai-kovil-2பரிசாரகர் பண்டாரி கணக்கர்
இந்த ஆலய ஊழியத்துக்காக பரிசாரகர், பண்டாரி, கணக்கர் போன்றவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி இங்கு 4 பண்டாரிகளும், 170 மாணிகளும், 6 கணக்கர்களும், 12 கீழ்கணக்கர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். சிலர் நிரந்தர ஊழியர்கள். மற்றையோர் பல்வேறு ஊர்களிலிருந்து சுழற்சி முறையில் கோயில் பணியில் இருப்பார்கள். கோயில் பண்டாரம் (stores) கருவறைப்பணி, கணக்குப்பணி இவற்றில் இருப்போர் கோயிலுக்குரிய பெரும் சொத்துக்களை பராமரிப்பவர்கள் என்பதால் இவர்களுக்குச் சொந்தமாக நிலம், பொருள், உறவினர் ஆகியவை இருத்தல் அவசியம். கருவூலத்தில் பொன், நவமணிகள், நெல் போன்ற விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பதால் இங்கு பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை இதனால் அறிய முடிகிறது.
காவலர்கள்
பெரிய கோயில் பண்டாரங்களில் விலை உயர்ந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததால், இவை அனைத்தும் சோழ மண்டல மக்களுக்குச் சொந்தம் இதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்பதால் மன்னன் இவைகளுக்குத் தகுந்த காவலர்களை நியமித்தான். சோழ மண்டலம் முழுவதிலும் 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் நியமிக்கப் பெற்றனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
ஆலயத்திற்குக் கொடைகள்
இராஜராஜேச்சரத்தில் திருவிளக்குகள் ஏற்றுவதற்காக நெய் முதலானவை கிடைக்க ஆயிரக்கணக்கான ஆடுகள், பசுக்கள், எருமைகள் ஆகியன கொடுத்திருந்தான். ஒரு விளக்குக்கு நாள் ஒன்றுக்கு ஓர் உழக்கு நெய் அளிக்க வேண்டும். இதற்காக பணமாகவோ நிலமாகவோ அளிக்காமல் ஊருக்கும் பயன்படும் விதத்தில் கால்நடைகளையே அளித்திருந்தான். மன்னன் மட்டுமா? அவன் அமைச்சர்கள், அரண்மனைப் பெண்டிர், உயர் அதிகாரிகள் அனைவருமே இந்த கொடையில் பங்கு பெற்று கொடைகள் அளித்து மகிழ்ந்தனர். காசு ஒன்றுக்கு 2 ஆடும், காசு இரண்டுக்கு 1 பசுவும், காசு மூன்றுக்கு ஒரு எருமையும் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.
பல்வேறு இடங்களில் வாழ்ந்தவர்கள் இந்தக் கொடைகளை வாங்கிக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய் அளிக்க ஒப்புக்கொண்டனர். அவன் எவ்வளவு கால்நடைகள் வைத்திருந்தாலும் அவன் கோயிலுக்குத் தரவேண்டியது ஒரு உழக்கு நெய்தான், மீதம் அவன் சொந்தத்துக்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான அவசியப் பண்டங்களின் விலைக் கட்டுப்பாடு
இன்றைய தேதியில் நாமெல்லாம் விலைவாசி உயர்வு பற்றி பேசிப்பேசி பலன் எதுவுமின்றி தவித்து வருகிறோமல்லவா? ஆனால் அன்று மாமன்னன் ராஜராஜன் விலைவாசி உயராமல் இருக்கக் கடைப்பிடித்த ஒரு சிறிய வழக்கத்தைப் பார்க்கலாம்.
ஆலயத்தில் விநாயகருக்கு நாள்தோறும் வாழைப்பழம் நிவேதனம் செய்ய அறக்கட்டளை அமைத்திருந்தான். அப்படி விநாயகருக்கு தினந்தோறும் 150 வாழைப்பழம் வழங்குவதற்கு 360 காசுகளை முதலாகப் போட்டு ஆலயத்தின் பண்டாரத்தில் (Treasury) வைத்திருந்தான். இது என்ன வேடிக்கை? 300 காசுகள் முதல் போட்டு தினந்தோறும் 150 வாழைப்பழமா? ஆம்! ஒரு நாள் நிவேதனத்துக்கு 150 பழங்கள் தேவை என்றால் ஆண்டொன்றுக்கு (360×150=54000) பழங்கள். அன்றை வாழைப்பழ விலை ஒரு காசுக்கு 1200 பழங்கள். ஒரு வருடத்திற்கு வேண்டிய தொகை 45 காசுகள். இந்தத் தொகையை ஆண்டு வட்டியாகப் பெறும் மூலதனம் 360 காசுகள் என்பதிலிருந்து வட்டி விகிதம் 12.5% என்று தெரிகிறது. உள்ளூர் வணிகர்கள் வட்டிக்குப் பணம் வாங்கினார்கள். அந்த வட்டியைக் கணக்கிட்டே அரசன் 360 காசுகளை மூலதனமாகப் போட்டு தினந்தோறும் தேவையான வாழைப்பழங்களை நிவேதனத்துக்குப் பெற்றான் என்பதிலிருந்து, மன்னனுடைய பொருளாதார அறிவையும், விலைவாசியைக் கட்டுக்குள் வைக்கும் வழிகளையும் தெரிந்திருந்தான் என்பது புரிகிறது. மன்னனுடைய இந்த ஏற்பாட்டின்படி மூலதனம் அப்படியே இருக்கும், ஆண்டு வட்டி வருமானத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக் கொள்வார்கள். அப்படி வட்டிக்கு பண்டாரத்திலிருந்து பணம் வாங்கிக்கொள்ள வர்த்தகர்கள் முன்வந்தார்கள்.
வாழைப்பழ எடுத்துக்காட்டினைப் பார்த்தோம். அதுபோலவே செண்பக மொட்டு, இலாமிச்சம், பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், புளி, தயிர், கொள்ளு, உப்பு, வாழையிலை, வெற்றிலை, பாக்கு, சிதாரி, கற்பூரம், விறகு, பழைய அரிசி ஆகிய பொருட்களின் விலைகளும் கால்நடைகளின் விலைகளும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன என்பதை தஞ்சை கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.
templetower1கல்வெட்டில் செதுக்கப்பட்ட மன்னன் அளித்த நிவந்தங்கள்
தஞ்சை இராஜராஜேச்சரத்தில் உள்ள இராஜராஜ சோழனின் முதல் கல்வெட்டு கூறும் செய்தி இது:- “நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.
மன்னன் ராஜராஜன் இத்திருக்கோயிலுக்கு அளித்த ஆயிரக்கணக்கான பொருட்கள் வரிசையில் முதலில் குறிப்பிடப் பெற்றவை 829 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற ஸ்ரீபலி எழுந்தருளும் தேவர் பொன் திருமேனியும் 995 கழஞ்சு எடையில் செய்யப்பெற்ற பொன்னாலான பத்மத்துடன் கூடிய ஸ்ரீபலிபீடம் என்பதையும் அறியமுடிகிறது. இங்கு “ஸ்ரீபலி” என்று குறிப்பிடப்படும் சொல்லுக்கு “அர்ப்பணித்தல்” என்று பொருள். மாமன்னன் காலத்தில் இந்தக் கோயிலில் தினமும் வாத்திய இசையோடு கூடிய நாட்டியம் எனும் ஆடற்கலையும் ஈசனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது எனும் செய்தி இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட வாத்தியக் கருவிகள்
ஸ்ரீராஜராஜீச்சரத்தில் பல வாத்தியக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. குழல், உடுக்கை, இலைத்தாளம், கொட்டி மத்தளம், கின்னரம், பறை, மெராவியம், வங்கியம், பாடவியம், வீணை, முத்திரைச்சங்கு, சகடை ஆகியவை இவை. இவற்றில் மெராவியம் என்பது நாகசுரம் போன்ற ஒரு குழல் இசைக்கருவியாக இருக்கலாம் என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. பாடவியம் என்பதோர் மற்றொரு இசைக்கருவி. இது பற்றி ராஜராஜன் கல்வெட்டுகளில் காணப்படும் செய்தி.
“திருவிடைமருதுடையார் கோயிலில் பாடவியத்திற்கு முன்பு நிவந்தமில்லாமையில் அத்தேவர்க்கு பாடவியம் வாசிக்க நித்த நெல்லு இருதூணியாக அரையன் திருவிடைமருதூருடையானான மும்முடிச்சோழ நிருத்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்தோம்…”
“திருமுகப்படியே திருவிடைமருதூருடையார் கோயிலில் பாடவியக் காணியுடையார் ஸ்ரீராஜராஜதேவர் பெருந்தனத்து காந்தப்பரில் அரையன் திருவிடைமருதுடையானான மும்முடிச்சோழ நித்தப் பேரரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் காணியாகக் குடுத்த இப்பாடவியம் வாசிப்பானுக்கு நித்தம் நெல்லு இருதூணியாக ஒராட்டைக்கு நெல்லு இருநூற்று நாற்பதின் கலம்…” என்று குறிக்கப்பட்டிருக்கிறது.
thanjai-kovil-4ஸ்ரீவிமானம் பொன்வேய்ந்தது
இராஜராஜன் திருவாயிலிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டின்படி இராஜராஜேச்சரத்துக்கு மன்னன் விமானம் முழுவதும் பொன் வேய்ந்தான் என்று தெரிகிறது. இதுதவிர மன்னனின் தமக்கையார் குந்தவை நாச்சியார் (அக்கன் என்று குறிப்பிடப்படுபவர்) பட்டத்தரசி ஓலோகமகாதேவியார், மற்றொரு மனைவியான சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகியோரும் கொடைகள் அளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே மன்னனுடைய தேவிகளாவர்.
நாயக்க மன்னர்கள் ஆட்சியில் பெரிய கோயில்
தஞ்சையை செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாதநாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய அரசர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை ஆண்டுகொண்டிருந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணிகளும், ஆலயங்கள் பராமரிப்பும் மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. ஆலயங்களில் இசை, நாடகம், நாட்டியம் ஆகிய கவின் கலைகள் வளர்ச்சி பெற்றன. குறிப்பாக ஆந்திரப் பகுதியிலிருந்து இங்கு வந்த புதிய கலையான பாகவத மேளா எனும் இசைநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றன. சோழ மன்னர்கள் விட்டுச்சென்ற இசைப் பாரம்பரியத்தோடு, வளமும் புதுமையுமான நாயக்க மன்னர்களின் இசை மரபுகளும் சேர்ந்து கொண்டன. தஞ்சை கலைகளின் இருப்பிடமாக மாறியது. இவர்கள் காலத்தில்தான் ஆலயத்திலிருந்த மகாநந்தி புதிதாக அமைக்கப்பட்டது, சோழர்களின் நந்தி இப்போது வராகி அம்மன் கோயிலுக்கருகில் இருக்கிறது. பிரகாரத்தில் சுப்பிரமணிய சுவாமிக்குப் புதிய கோயில் கட்டப்பட்டது.
ஆலயத்தில் மூர்த்திஅம்மன் மண்டபம், மல்லப்ப நாயக்கர் மண்டபம் ஆகியவை நிருவப்பட்டன. செவ்வப்ப நாயக்கரும் அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இந்நகரின் பொற்கொல்லர்களுக்கு சில உரிமைகளை வழங்கினர்.
மராட்டியர் ஆட்சி காலத்தில்
கி.பி. 1675 தொடங்கி 1850 வரையில் தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஏகோஜி, சஹாஜி, முதலாம் சரபோஜி, துளஜேந்திரராஜா, பாவாசாகிப், சுஜான்பாயி, பிரதாபசிம்ம ராஜா, இரண்டாம் துளஜா, அமரசிம்மன், இரண்டாம் சரபோஜி, சிவாஜி, காமாட்சிபாயி ஆகியோர் ஆண்டு வந்தார்கள். இவர்கள் காலத்தில் ஆலயத்தின் பல பகுதிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. கலைகள் ஏற்றம் பெற்றன. சிற்ப, சித்திர, நாட்டிய, இசை போன்ற கலைகள் வளர்ச்சியடைந்தன.
இரண்டாம் சரபோஜி காலத்தில் திருக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. சரபோஜியின் போஸ்லே வம்ச வரலாறு கல்வெட்டில் வெட்டப்பட்டது. 1729ல் குடமுழுக்கு நடைபெற்றது. விமான உச்சியில் அப்போது ஒரு புதிய கலசம் வைக்கப்பட்டது. அதில் ‘ராசா சரபோசி மகாராசா உபையம்’ என்று எழுதப்பட்டிருந்தது. கடைசி மராட்டிய மன்னனான சிவாஜி காலத்தில் 7-9-1843ல் மற்றொரு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. 1798 முதல் 1832 வரை தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி பல அறப்பணிகள் செய்தான். இவன் காலத்தில் பிரகாரத்துக்குக் கல் தளம் அமைக்கப்பட்டது. வடகிழக்கிலுள்ள மண்டூக தீர்த்தக் கிணறு புதுப்பிக்கப்பட்டது. வடமேற்குப் பகுதியில் ஒரு கணபதி ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும்
பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வாலயம் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. யுத்த காலத்தில் சிப்பாய்களும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானப்படை தாக்குதலை சமாளிக்க நிறுவப்பட்ட ஒரு படையும் இவ்வாலயத்தினுள் முகாமிட்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில்கூட பல ஆண்டுகள் இவ்வாலயத்துக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருந்தன. இது தொல்பொருள் இலாகா வசம் இருப்பதால் அவர்கள் இதனை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துபோகவும் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு மக்கள் சிறிது சிறிதாக இவ்வாலயத்தின் பெருமை கருதி வரத் தொடங்கினர். சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒரு முக்கிய இடமாகக் குறிக்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில் இவ்வாலய அர்ச்சகர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட திணறியது நிர்வாகம்.
nandhi1
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இங்கு சுற்றுலா கூட்டமும், உள்ளூர் கூட்டமும் அலைமோதுகிறது. தென்னக பண்பாட்டு மையம் தங்கள் கலை நிகழ்ச்சிகளையும், நாட்டியம், இசை போன்றவற்றை இவ்வாலயத்தின் நந்தி மண்டபம் அருகே நடத்துகின்றனர். ஆலயம் புத்துயிர்பெற்று பழம்பெருமையை மீண்டும் பெறுவதற்கான வெற்றிப் பயணத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பெருமையை ஒரு முறையாவது நேரில் வந்து பார்ப்பவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும். காலங்கள் மாறினாலும், மன்னன் வாழ்ந்த அரண்மனை, நகரம் இவை அழிந்து போனாலும், அவன் எழுப்பிய இந்த வானுயர இராஜராஜேச்சரம் காலம் காலத்துக்கும் நிலைத்து நின்று, மன்னன் ராஜராஜனின் புகழை உயர்த்திப் பிடிக்கும்.